Tuesday, September 22, 2009

பாடல் முயற்சி ஒன்று

ஒற்றைப் புல்லாங்குழல் ஒன்று
தெருவின் முனையில் கரைகிறது
உயிரைக் கொல்லும் குரலொன்றில்
கவிதை மிதந்து வருகிறது
இரவில் குளிரில் நான் நின்றால்
எதுவோ இதமாய் சுடுகிறது
எல்லாம் நீதான் நானறிவேன்
இருந்தும் இறங்கி வரமாட்டேன்

(கோரஸ்)
காதல் மட்டும் போதாது
கனவை உண்ண முடியாது
வானம் கூரை எனச் சொல்லி
வாழ்ந்து தீர்க்க முடியாது

மழையின் குரலில் ஒரு பாடல்
நீர்ச்சரமாய் வழிய நான் கேட்டேன்
இழையும் குழையும் அது நெஞ்சில்
இருந்தும் ஒரு சொல் தரமாட்டேன்
உருகி மருகிப் பேசுகிறாய்
உயிருள் அனலை வீசுகிறாய்
பெருகும் எனக்கும் காதல் வலி
இருந்தும் நம்பிக்கை தரமாட்டேன்

(கோரஸ்)
காதல் மட்டும் போதாது
கனவை உண்ண முடியாது
வானம் கூரை எனச் சொல்லி
வாழ்ந்து தீர்க்க முடியாது

உயரம் சிகரம் நீ தொடுவாய்
ஒருநாள் திரும்பி நீ வருவாய்
இதயம் ஒளித்துக் காத்திருப்பேன்
எனை இழக்காமல் வழி பார்த்திருப்பேன்
காற்றில் அலையும் சிறகொன்று
கையில் வந்து படிவதுபோல்-உன்
மார்பில் வந்து நான் விழுவேன்
மரணம்போல நான் அழுவேன்

(கோரஸ்)
காதல் மட்டும் போதாது
கனவை உண்ண முடியாது
வானம் கூரை எனச் சொல்லி
வாழ்ந்து தீர்க்க முடியாது

1 comment:

Kousalya Raj said...

பாடல் போல பாடி விட்டேன்....!! :))
நல்ல ரசனையான வரிகள்.....

//காதல் மட்டும் போதாது
கனவை உண்ண முடியாது
வானம் கூரை எனச் சொல்லி
வாழ்ந்து தீர்க்க முடியாது//

என்னை அதிகம் கவர்ந்த வரிகள்..!!

wishes!!

Post a Comment